இயற்கை வாழ்வியலின் ஐந்து ஒற்றுமைகள்!
இயற்கை வாழ்வியலின் அடிப்படை கோட்பாடுகளில் இந்த ஐந்து ஒற்றுமைகள் முக்கிய பங்கு பெறுகிறது, இவற்றின் மூலம் இயற்கை வாழ்வியலின் தனித்தன்மையையும் அது எப்படி மற்ற மருத்துவ முறைகளில் இருந்து வேறுபடுகிறது என்பதையும் புரிந்த கொள்ள உதவுகிறது.
1. எல்லா நோய்களும் ஒன்றே
இயற்கை வாழ்வியலில் தனித்தனி பெயர்களை கொண்டு நோய்கள் அடையாளம் காணப்படுவதில்லை. வெளிச்சத்தின் குறைவு தான் இருட்டே தவிர இருட்டு என்பது தனியாக ஒரு பொருள் அல்ல அதே போல ஆரோக்கியத்தின் குறைவு தான் நோய், நோய் என்பது தனியாக ஒரு பொருள் இல்லை.ஆரோக்கியத்தை மேம்படுத்த உயிர் செய்யும் முயற்சியே நோய்.
2. எல்லா நோய்களுக்குமான காரணமும் ஒன்றே
உடலில் பலவித உபாதைகள் ஏற்பட்டாலும் அவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே . ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உடல் அசுத்தம் அடைகிறது.சுத்தமான உடலில் உயிரின் செயல்பாடு ஆரோக்கியம், அசுத்தமான உடலில் உயிரின் செயல்பாடே நோய் எனப்படுகிறது.
எல்லா நோய்களுக்குமான காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் அதனால் உடல் அடையும் அசுத்தமேயாகும்.
3. எல்லா நோய்களுக்குமான மருத்துவமும் ஒன்றே
இயற்கை வாழ்வியலில் நோய்க்கு மருத்துவம் செய்ய என்று தனியாக ஒரு தத்துவமும், ஆரோக்கியத்தை மேம்படுத்த என்று தனியாக ஒரு தத்துவமும் இல்லை. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தத்துவுமே நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.இயற்கை வாழ்வியலில் பலவித உபாதைகளுக்கு தனித்தனியாக மருத்துவம் செய்யப்படுவதில்லை மாறாக நோய் வாய்பட்டவரின் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
ஆரோக்கியம் மேம்பட்ட நிலையில் உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளுகிறது.
முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே எல்லா நோய்களுக்குமான மருத்துவம்.
4. உணவும் மருந்தும் ஒன்றே
"உணவே மருந்து" என்பது இயற்கை வாழ்வியலின் அடிப்படை தத்துவங்களில் மிக முக்கியமான ஒன்று. எந்த எந்த பொருட்களை தனி ஒரு உணவாக எடுத்து கொள்ள முடிகிறதோ அவற்றை மட்டுமே மருந்தாகவும் பயன் படுத்த வேண்டும், மாறாக மருத்துவ குணமுள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்வதோ அல்லது மருந்தாக பயன்படுத்துவதா ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சிக்கு தேவையற்றது.உணவு மட்டுமே மருந்து - எந்த எந்த பொருட்களை தனி ஒரு உணவாக எடுத்து கொள்ள முடிகிறதோ அவற்றை மட்டுமே மருந்தாகவும் பயன் படுத்த வேண்டும்.
5. நோயும் ஆரோக்கியமும் ஒன்றே
எப்படி இருட்டு தனியாக ஒரு பொருள் இல்லையோ அதே போல நோய் என்பது தனியாக ஒரு பொருள் அல்ல, ஆரோக்கியத்தின் குறைவே நோய்.மேலும் இயற்கை வாழ்வியலில் நோய்களுக்கு தனியாக மருத்துவம் என்பது இல்லை, ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சியே நோயை குணப்படுத்துகிறது, ஆதலால் குறைந்த ஆரோக்கியத்தை தவிர நோய் என்ற ஒன்று இல்லை.
ஆரோக்கியம் மறையும் போது உணரப்படுவது நோய், நோய் மறையும் போது உணரப்படுவது ஆரோக்கியம், இவை இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது - நோயும் ஆரோக்கியமும் ஒன்றே .
இயற்கை வாழ்வியலில் இந்த ஐந்து ஒற்றுமைகள் தவிர்த்து மேலும் சில ஒற்றுமைகளும் உண்டு,
6. நமது உடல், மனம் மற்றும் ஆன்ம *நலம் என்பது ஒன்று அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகிறது.
7. எல்லா சமயங்களிலும் நமது முழுமையான *நலனே(Holistic Health) கருத்தில் கொள்ளப்பட வேண்டும், முழுமையான நலத்தை பெருக்கும் முயற்சியே பயனளிக்கும், தனித்தனி உறுப்புகளின் நலனை பெருக்க செய்யும் முயற்சிகள் தேவையற்றது.
*நலம் = ஆரோக்கியம்
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், இயற்கை வாழ்வியல் நிபுணர்
+91 95978 50102
Comments
Post a Comment